பத்திரிகையாளர் நல வாரியம் ! - தமிழக அரசு அறிவிப்பு
பத்திரிக்கையாளர்கள் நல நல வாரியம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அறிவிப்பில் அமைச்சர் சாமிநாதன் இதனை அறிவித்தார்.
பத்திரிகையாளர்களுக்கு மேலும் பல திட்டங்களையும் அரசு அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் வருமாறு;
உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் ‘பத்திரிகையாளர்கள் நல வாரியம்’ அமைக்கப்படும்.
பத்திரிகைத் துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர் மற்றும் பிழைதிருத்துவோர் பணிக்காலத்தில் இயற்கை எய்திட நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தற்பொழுது குடும்ப உதவி நிதியாக அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கேற்ப ரூபாய் மூன்று இலட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் குடும்ப உதவி நிதி ரூபாய் மூன்று இலட்சத்திலிருந்து ரூபாய் ஐந்து இலட்சமாக உயத்தி வழங்கப்படும்.
பத்திரிகையாளர்கள் தங்களின் துறை சார்ந்த தொழிற் தகுதியை மேம்படுத்திக் கொள்வதற்கும் திறன்மேம்பாட்டை அதிகரிக்கவும், மொழித்திறன் மற்றும் நவீனத் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கவும் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும்.
இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி இளம் பத்திரிகையாளர்கள் ஊடகத்துறையில் சிறந்து விளங்கவும், அதன் நுணுக்கங்களை முழுமையாக அறிந்துகொள்ளவும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த இளம் பத்திரிகையாளர்களைத் தெரிவுசெய்து, இந்திய அளவில் புகழ்மிக்கஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ் (IIMC), ஏசியன் காலேஜ் ஆப்ஜர்னலிசம் (ACJ) போன்றப பத்திரிகை சார்ந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி படிக்கவும், பயிற்சி பெறவும் நிதியுதவி வழங்கப்படும்.
சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” இதழியியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் “கலைஞர் எழுதுகோல் விருது” மற்றும் ரூபாய் ஐந்து லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்
ஆகிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.